Thursday, December 24, 2009

CHINA அத்துமீறல்: எதிர்ப்பதில் தயக்கம் ஏன்?

PIB
காஷ்மீரின் கிழக்குப் பகுதியான லடாக்கில் ஜம்மு-காஷ்மீர் அரசு நிறைவேற்றிக் கொண்டிருந்த சாலை போடும் பணி சீனா இராணுவத்தின் தலையீடு காரணமாக நிறுத்தப்பட்டது ஏன் என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு அயலுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா அளித்துள்ள பதில் விநோதமானது.

மக்களவையில் கடந்த புதன்கிழமை எல்லைப் பிரச்சனை தொடர்பாக நடந்த விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய முன்னாள் அமைச்சரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான முரளி மனோகர் ஜோஷி, எல்லைப் பகுதியில் சீன இராணுவம் மேற்கொண்ட 20க்கும் மேற்பட்ட ஊடுருவல்களை எவ்வாறு மத்திய அரசு சாதாரணமானதாக எடுத்துக் கொள்கிறது என்று புரியவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள எல்லைப் பகுதியில் நடந்த சாலை அமைப்புப் பணியை சீன இராணுவம் தலையிட்டு எப்படி நிறுத்த முடியும் என்றும் கேள்வி எழுப்பினார். இதே கேள்வியை சிவசேனா உறுப்பினர் அனந்த் கீத்தேயும் எழுப்பியுள்ளார்.

இதற்கு அயலுறவு அமைச்சர் கிருஷ்ணா அளித்த பதில் இதுதான்: “அங்கு (லடாக்கில்) சாலை அமைக்கும் பணியைத் துவக்கியதிலோ அல்லது நிறுத்தியதிலோ இந்திய அரசிற்கு எந்த பங்கும் இல்லை. அது முழுமையாக ஜம்மு-காஷ்மீர் அரசு எடுத்த முடிவாகும்”. எப்படியிருக்கிறது அயலுறவு அமைச்சரின் பதில்!

லடாக்கில் நமது நாட்டின் (இராணுவத்தின்) கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில், அந்தப் பகுதியின் நிர்வாக அதிகாரம் பெற்ற மாநில அரசு சாலை போடும் திட்டத்தைத் துவக்கியது தவறு என்று கூறுகிறாரா அயலுறவு அமைச்சர் கிருஷ்ணா? காஷ்மீரின் கிழக்குப் பகுதியில் இந்திய - சீன (திபெத்) எல்லைப் பகுதியில் உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டில் (Line of Actual Control), இந்தியாவின் கட்டுப்பாட்டிலுள்ள டெம்சோக் என்ற கிராமத்தில் 8 கி.மீ. நீளத்திற்குச் சாலை போடும் பணி நடந்து வந்தது. அதனை சீனா என்ன சொல்லி நிறுத்தியுள்ளது? இரு நாடுகளுக்கும் இடையிலான தகராறுக்கு உட்பட்ட பகுதியில் எந்த‌ப் பணியையும் நிறைவேற்றக் கூடாது என்று கூறியுள்ளது. சீனா கூறியதை மத்திய அரசு ஏற்கிறதா? என்பதே கேள்வி.

FILE
அப்படி தகராறுக்கு உட்பட்ட பகுதி என்று சீனா கூறும் எல்லைப் பகுதிகளில் எல்லாம் எந்த விதமான திட்டத்தையும் நிறைவேற்றக் கூடாது என்பதை இந்தியா ஒப்புக்கொள்ளுமா? அப்படியானால், அருணாச்சலப் பிரதேச மாநிலமே தகராறுக்கு உட்பட்டப் பகுதி என்று சீனா கூறியதையும், அங்கு திபெத் தலைவர் தலாய் லாமா செல்ல அனுமதிக்கக் கூடாது என்றும், அங்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய பிரதமர் மன்மோகன் சிங் செல்லக் கூடாது என்று கூறியதை மத்திய அரசு ஏற்காதது ஏன்?

எல்லைப் பகுதியில் நமது கட்டுப்பாட்டிற்கு உட்பட்டப் பகுதியில் சாலை போடுவதை நிறுத்துமாறு சீனா எந்த அடிப்படையில் ஆட்சேபித்தது? அதனை என்பதை இந்திய அயலுறவு அமைச்சர் கிருஷ்ணா விளக்காதது விநோதமானது.

எல்லைப் பிரச்சனை தொடர்பாக இரு நாடுகளும் 13 சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தி முடித்துள்ள நிலையில், அந்தந்த நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் மேம்பாட்டுத் திட்டங்களை நிறைவேற்றக் கூடாது என்று ஒரு நாடு மற்றொரு நாட்டை எவ்வாறு நிர்பந்திக்கலாம்? சீன இராணுவம் நேரிடையாக தலையிட்டு சாலை போடும் பணியை நிறுத்தியதாகவே உள்ளுர் மக்கள் கூறியதாக செய்திகள் கூறுகின்றன. அப்படியானால் அந்த எல்லைப் பகுதியில் நமது படைகள் இல்லையா?
இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள எல்லைப் பகுதியில் 20க்கும் மேற்பட்ட ஊடுவல்களை (இந்த ஆண்டில்) செய்துள்ளது சீனா. அதனை ஒப்புக் கொள்ளும் மத்திய அரசு, சீனத்திற்கு வெளிப்படையான கண்டனத்தைத் தெரிவிக்காதது ஏன்? இதைத்தான் முரளி மனோகர் ஜோஷி கேட்டுள்ளார். இதற்கு அமைச்சர் கிருஷ்ணா அளித்துள்ள பதில், “இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க முயன்று வருகிறோம். இரு நாடுகளுக்கும் இடையிலான முரண்பாட்டை பெரிதாக்க விரும்பவில்லை” என்று கூறியுள்ளார். அப்படி ஒரு அணுகுமுறையை சீனா கடைபிடிக்கவில்லையே! “1962இல் கற்ற பாடத்தை இந்தியா மறந்துவிட்டது போல” என்றல்லவா கூறியது. இந்தியா மட்டும் தணிந்து போகும் இப்படிப்பட்ட பலவீனமான அணுகுமுறைக்கு காரணம் என்ன?

இதுவே பாகிஸ்தான் இராணுவம் செய்திருந்தால் இதேபோன்ற பதிலை அளிக்குமா மத்திய அரசு? “கடுமையான பதிலடி கொடுப்போம்” என்றல்லவா முழங்கியிருக்கும்! காஷ்மீரின் மேற்குப் பகுதியில் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் நான்கு, ஐந்து தீவிரவாதிகள் ஊடுருவதையே பெரிதாக்கி செய்தி கொடுக்கும் இந்திய எல்லைக் காவல் படையும், இராணுவமும், கிழக்குப் பகுதியில் சீனாவின் இராணுவமே ஆண்டுக்கு 50 முறை ஊடுருவல் நடத்தும் நிலையிலும் அமைதிகாப்பதேன்?

PIB
“சீனாவை எதிர்கொள்ள நாங்கள் தயாரில்லை என்று நீங்கள் (மத்திய அரசு) கூறுங்கள். இல்லையென்றால் 1962ஆம் ஆண்டு நடந்ததுபோல் மீண்டும் நடக்கும், நாமும் வாயைப் பிளந்துகொண்டு பார்த்துக் கொண்டிருக்க வேண்டிவரும்” என்று முரளி மனோகர் ஜோஷி எச்சரித்துள்ளார்.

“சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள மத்திய அரசு அஞ்சுகிறது” என்று சிவசேனா உறுப்பினர் அனந்த் கீத்தே கூறியதற்கு அமைச்சர் கிருஷ்ணா அளித்த பதில் ஒரு அணு ஆயுத வல்லரசின் குரலாக இல்லை என்பது வருந்தத்தக்கது.

இன்று இந்தியாவின் (காஷ்மீரின்) அங்கமாக உள்ள லே பகுதி முழுவதும் தகராறுக்கு உட்பட்டப் பகுதி என்று சீனா கூறினால் உடனே அங்கு தனது நிர்வாகத்தை திரும்பப் பெறுமா இந்தியா?

பயங்கரவாதத் தாக்குதல்கள், உள்நாட்டுப் பிரச்சனைகள், மேற்கத்திய நாடுகளின் அழுத்தம் என்று எல்லா திசைகளிலும் மிரட்டலை சந்தித்துக் கொண்டிருக்கும் பலவீனமான பாகிஸ்தானை ஒரு அச்சுறுத்தலாக மத்திய அரசு காட்டுகிறது. ஆனால் ஒவ்வொரு நாளும் தனது இராணுவத்தைக் கொண்டே அத்து மீறும் சீனாவுடன் இளகிய, பலவீனமான இராஜ தந்திரப் போக்கை மத்திய அரசு கடைபிடிக்கிறது.

எல்லைப் பிரச்சனைக்குத் தீர்வு காண சீனாவுடன் 13 சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தி முடித்த பின்னர் இதுதான் நிலைமை என்றால், சீனாவை நோக்கிய இந்தியாவின் பார்வை நிச்சயமற்றதாகவே தெரிகிறது.

தனது வாதத்தில் முரளி மனோகர் ஜோஷி கூறியதுபோல, சீனாவை எதிர்கொள்ளும் ஒரு நீண்ட கால கொள்கையை இந்தியா உருவாக்க வேண்டும், அதனடிப்படையில் தனது பன்னாட்டு உறவுகளை உறுதி செய்துக்கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment

Followers

About Me

My photo
இந்தியன் என்பதில் பெருமை கொள்ளும் ஒரு இந்தியன்